Monday, April 2, 2012

பைத்தியகாரனின் விடியல்...


ஆதங்கத்தின் அடிவேர்களில்
அம்மணமாகிறேன் நான்...
நினைவுகள் பேதலித்து
நிசப்தமாய் கிடக்கிறது
என் உலகம்...!

சூனியம் என்னை
சுவைக்கிறது..!
தொட்டுவிட எத்தனித்து
துரத்துகிறேன்....
வெட்டுப்பட்ட போதியாய் கிடக்கிறது
எனக்கான விடியல்...!

Sunday, December 12, 2010

பைத்தியக்காரனும் படக்கதையும்....

அலுவலக நண்பர்களுடன் படக்கதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்... சிறிது நேரத்தில் நண்பர்கள் கிளம்பி விட , காமிக்ஸ் பற்றிய எனது அனுபவங்கள் கண் முன் விரியத் தொடங்கின... எனக்கு அப்போது பத்து வயதிருக்கும்,அன்று தான் காமிக்ஸ் புத்தகம் எனக்கு அறிமுகமானது ... எனது நண்பன் பிரகாஷ் எனக்கு அதை காட்டினான்... ராணிமுத்து காமிக்ஸ்..இரும்புக்கை மாயாவி கதை.. படித்துப்பார், நல்ல இருக்கும் என்று கொடுத்தான்.. அதன் அட்டையில் ஒரு முகமூடி மனிதன் ஒரு மொட்டைதலை ஆளை அடிப்பது போல பளபளக்கும் படம்... அட்டையின் ஓரத்தில் ஒரு எலும்புகூடு முத்திரை... பார்த்ததுமே அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் மனதில் ஒட்டிக்கொண்டது... அதுவரை புத்தகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களை போட்டு, பக்கம் பக்கமாக எழுதப்பட்ட கதைகளை மட்டுமே படித்துப் பழகிய எனக்கு, நிறைய படங்கள், தத்ரூபமான உணர்சிகளுக்கு இடையே கதை சொல்லப்பட்ட விதம் அதற்குள் மேலும் மேலும் என்னைப் புகுத்தியது....என் கண் முன் வால்டரும்,டயானாவும், டேவிலும்,ஹீராவும்,மண்டை ஓட்டு குகையும், சித்திரக் குள்ளர்களும் காட்சிப் படுத்தப்பட்டன.. அந்தப் படங்களில் இருந்த உயிரூட்டம் என்னை கிறங்கடித்தது... நான் படித்துக் கொண்டே திரைப்படம் பார்ப்பது போல ஒரு புதிய அனுபவதிக்கு ஆளாகப்பட்டேன்...ஒரே மூச்சில் அதைப் படித்து முடித்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை வீட்டில் வைத்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றேன்... என் வீட்டில் காமிக்ஸ் புத்தகம் இருப்பதை பார்த்த என் அப்பா என்னை அழைத்து கண்டபடி திட்டினார்... காமிக்ஸ் படித்தால் படிப்பு பாழாகும் என்று அதை எடுத்துச் சென்று விட்டார்... நான் என் அம்மாவிடம் திரும்ப சென்று கேட்டபோது அப்பா அந்தப் புத்தகத்தை கிழித்துவிட்டதாக சொன்னதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...

தொடரும்.....

Wednesday, June 30, 2010

பைத்தியக்காரனின் கனவு....




கனவுலகில் சஞ்சரித்தான் பைத்தியக்காரன்.... ஒத்தையடிப் பாதையொன்று அவன் முன் விரிகிறது... நடக்கத் துவங்குகிறான்.. பாதையின் முடிவில் அவனுக்காய் காத்திருக்கிறது கடல்... அதில் அலைகள் இல்லை... அது சப்தமிடுவதில்லை... சலனமற்ற சமுத்திரம் அவனை முழுவதுமாய் விழுங்கிவிடுகிறது.... அங்கு கையில் சிவப்பு நிறப் பழங்களுடன் பெண்கள் அவனை வரவேற்கிறார்கள்... ஆசையுடன் அவனுக்கு அந்தப் பழங்களை ஊட்டிவிட முயல்கிறார்கள்... அவன் அவைகளை தின்ன மறுத்து அவர்களை கடந்து செல்கிறான்.. எதிர்ப்பட்ட பாம்பை காரணமின்றி அடித்துக் கொல்கிறான்.. முன்னோர் ஜென்மத்துப் பகையை முடித்துவிட்ட பெருமிதத்தில் முன்னேறுகிறான்... தற்போது அவனை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு கருப்பு வெள்ளை என இரண்டு இதயங்கள் இருக்கின்றன...அவை துடிப்பதற்குப் பதிலாக பேசுகின்றன.. விசும்புகின்றன.. அழுகின்றன.. ஆசைப்படுகின்றன...காமத்தை தூண்டுகின்றன...ஏங்குகின்றன... பொறமைப்படுகின்றன...அதற்கு ஏற்ப பைத்தியகாரனை எதிர்கொண்ட இரண்டு இதய மனிதர்கள் உருமாறுகின்றனர்... நொடியில் ஏற்பட்ட மாற்றம் நாட்கணக்கில் தொடர்கிறது... உருமாறும் மனிதர்கள் அனைவரும் பைத்தியக்காரனைப் பார்த்து சிரிக்கின்றனர்.. கேலிசெய்கின்றனர்... அருகில் வர அஞ்சி தூரத்திலிருந்து ஓரக்கண்களால் அவனை வெறிக்கின்றனர்... அவர்களை விட்டு விலகி தனக்காய் காத்திருக்கும் காற்றுக்குமிழியில் ஏறிக்கொள்கிறான் அவன்...காற்றுக்குமிழி அவனை கிரகித்துக்கொள்கிறது...
அதன் வெற்றிடத்தில் தனக்குள் இருந்து தன்னை மீண்டும் பிரசவிக்கிறான் பைத்தியக்காரன்... புதிதாய் பிறந்த அவனின் இதயத்தை எதிரொலிக்கிறது காற்றுக்குமிழி... பைத்தியக்காரனின் இதயம் விசும்பவில்லை... அழுகவில்லை..ஆசைப்படுவதில்லை...காமம் தூண்டவில்லை... பொறாமைப்படுவதில்லை... ஏக்கத்தில் தவிப்பதில்லை... மாறாகத் துடிக்கிறது... லப் டப் ... லப் டப்..... லப் டப்.....

Friday, April 16, 2010

பைத்தியக்காரனின் புரிதல்..!


சிறு வயது நினைவுகளில் மூழ்கினான் பைத்தியக்காரன்....சின்னஞ்சிறு விரல்கள்,சிறிய கண்கள் ,சற்றே சிவந்த நிறம் என சிரித்த காலத்திற்குள் சிறகடித்தான் அவன்... அவனது புரிதல்கள் அப்போது முழுமையாய் இருந்தன... காரணம், முழுமை என்பதன் அர்த்தத்தை அவன் முழுமையாய் புரியாமல் இருந்தான்... புரியாததின் தொடக்கமே புரிதலின் முடிவாகிப் போயிருந்தது அவனுக்கு... அறியாமை அவனை முழுமையாக்கியிருந்தது...! அவனது தேடல்கள் யாவும், வேகமான வாகனம், வானவூர்தி, உயரப் பறக்கும் பட்டம், விருந்தினர் வருகை என அவனின் புரிதல்களின் எல்லைகளுக்குள் சுருங்கியிருந்தது...! முழுமை நோக்கி அவனது புரிதல் விரியத் தொடங்குகையில்... விரியும் எல்லைகளுக்கு போட்டியாய், கசங்கிய காகிதமாய் சற்றே தன்னை விரித்துக் கொண்டானே தவிர, முழுமையாய் தன்னை விரித்துக் கொள்ள முடியவில்லை...! தன்னை விரித்துக் கொள்ள தன்னால் முடியவில்லை என்றால்....? கேள்வி தன்னுள் எழுந்த போது அவன் மனித எல்லைகளை தாண்டத் தொடங்கியிருந்தான்....! தன்னால் விரியத் தானே முடியவில்லை, விடுவித்துக் கொள்ள முடியுமே... சின்னப் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினான் பைத்தியக்காரன்....!

Tuesday, December 22, 2009

பைத்தியக்காரனின் ராகம்...


எனக்கும் அவளுக்குமான உறவு ஒரு பியானோ இசைக்கலைஞனின் விரல்களுக்கும், பியானோ கட்டைகளுக்குமான நெருக்கத்தை போன்றது...மாலை மஞ்சள் வெளிச்சத்தின் கீற்றுகள் கதவின் வழியே கசிந்து பியானோவின் கால்களைத் தழுவி நிழல்களைப் பரிசளிக்கும் அந்தி மாலைப் பொழுதில் ,அவளுக்கான ராகத்தை வாசிக்க அமர்ந்த நாட்களில் தெரிந்தது அது அவ்வளவு சுலபமில்லை என்று... அன்று முதல் அவளுக்கான ராகத்தை இசைக்க அலைந்து திரிகிறேன் ஒரு தேசாந்திரியாய்.... அவளுடனான சந்திப்புகளில் நசுங்கி கிழிந்த நிமிடத் துளியின் அலறலில் தொடங்கி அவளில்லா நாட்களின் வெறுமையின் தகிப்பு வரை அவளுக்கான ராகதிற்க்காக சேமித்து வைத்துளேன்...உலகத்திற்கான தன் உறவை முடித்துக்கொண்டு உதிரும் இலையின் கடைசித் தருணங்களைப் பிழிந்து அவளுக்கான ராகத்தில் கலக்கும் எண்ணமிருக்கிறது எனக்கு...சிறு வயதில் அப்பாவின் கை பிடித்து நடை பழகிய நாட்களில், என்னை எதிர் கொண்ட அனைவருக்கும் அவளது முகச்சாயல் இருந்ததாக கண்ட கனவின் கடைசிச் சொட்டைக் கூட அவளுக்கான ராகத்தில் கலக்க எனது நியாபகச் செல்களில் பத்திரமாய் பதுக்கியிருக்கிறேன்....இருந்தும் இன்று வரை இசைக்கப் படாமலேயே இருக்கிறது அவளுக்கான ராகம்...

Wednesday, September 24, 2008

மழை


மழையில் நனைவது
உனக்குப் பிடிக்கும்...
உன்னை நனைப்பது
மழைக்குப் பிடிக்கும்...
உனை
நனைக்காத மழைத்துளிகள்
மண்ணில்பட்டு மரிக்காமல்
மறுஜென்மம் எடுக்கிறன...
மீண்டும் மீண்டும்
மழையாய்....

Sunday, September 7, 2008

நீங்களும் நானும் ....



சப்தங்களில் தொலைகிறீர்கள்
நீங்கள் ....
மௌனத்தில் நிலைக்கிறேன்
நான் ...
சத்தத்தை விட
ஆழமானது மௌனம் ..!

வெளிச்சத்தை மட்டும்
விரும்புகிறீர்கள் நீங்கள் ...
அதனால்தான்
உங்கள் நிழல்கூட
கருப்பாய் இருக்க்கிறது ....

சாதாரணங்களையும்
சன்னதி என்கிறீர்கள் நீங்கள் ...
சன்னதியையும் சாதாரணம்
என்கிறேன் நான் ...!

வயிரைதாண்டி வாழ்வதில்லை
நீங்கள் ....
உயிரைத்தாண்டியும் வாழ்ந்துகொண்டுள்ளேன்
நான் ...!

வீடுகளுக்கு மட்டுமே
கதவுகள் வைக்றீர்கள்
நீங்கள் ...
எனது பயணத்தின்
கதவுகள் மூடுவதேயில்லை...!

இறுதியாக
வாழ்வதாக நடித்து கொண்டுளிர்கள்
நீங்கள்....
உண்மையாய்
வாழ்ந்து கொண்டுள்ளேன்
நான் ...!