அலுவலக நண்பர்களுடன் படக்கதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்... சிறிது நேரத்தில் நண்பர்கள் கிளம்பி விட , காமிக்ஸ் பற்றிய எனது அனுபவங்கள் கண் முன் விரியத் தொடங்கின... எனக்கு அப்போது பத்து வயதிருக்கும்,அன்று தான் காமிக்ஸ் புத்தகம் எனக்கு அறிமுகமானது ... எனது நண்பன் பிரகாஷ் எனக்கு அதை காட்டினான்... ராணிமுத்து காமிக்ஸ்..இரும்புக்கை மாயாவி கதை.. படித்துப்பார், நல்ல இருக்கும் என்று கொடுத்தான்.. அதன் அட்டையில் ஒரு முகமூடி மனிதன் ஒரு மொட்டைதலை ஆளை அடிப்பது போல பளபளக்கும் படம்... அட்டையின் ஓரத்தில் ஒரு எலும்புகூடு முத்திரை... பார்த்ததுமே அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் மனதில் ஒட்டிக்கொண்டது... அதுவரை புத்தகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களை போட்டு, பக்கம் பக்கமாக எழுதப்பட்ட கதைகளை மட்டுமே படித்துப் பழகிய எனக்கு, நிறைய படங்கள், தத்ரூபமான உணர்சிகளுக்கு இடையே கதை சொல்லப்பட்ட விதம் அதற்குள் மேலும் மேலும் என்னைப் புகுத்தியது....என் கண் முன் வால்டரும்,டயானாவும், டேவிலும்,ஹீராவும்,மண்டை ஓட்டு குகையும், சித்திரக் குள்ளர்களும் காட்சிப் படுத்தப்பட்டன.. அந்தப் படங்களில் இருந்த உயிரூட்டம் என்னை கிறங்கடித்தது... நான் படித்துக் கொண்டே திரைப்படம் பார்ப்பது போல ஒரு புதிய அனுபவதிக்கு ஆளாகப்பட்டேன்...ஒரே மூச்சில் அதைப் படித்து முடித்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை வீட்டில் வைத்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றேன்... என் வீட்டில் காமிக்ஸ் புத்தகம் இருப்பதை பார்த்த என் அப்பா என்னை அழைத்து கண்டபடி திட்டினார்... காமிக்ஸ் படித்தால் படிப்பு பாழாகும் என்று அதை எடுத்துச் சென்று விட்டார்... நான் என் அம்மாவிடம் திரும்ப சென்று கேட்டபோது அப்பா அந்தப் புத்தகத்தை கிழித்துவிட்டதாக சொன்னதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
தொடரும்.....