எனக்கும் அவளுக்குமான உறவு ஒரு பியானோ இசைக்கலைஞனின் விரல்களுக்கும், பியானோ கட்டைகளுக்குமான நெருக்கத்தை போன்றது...மாலை மஞ்சள் வெளிச்சத்தின் கீற்றுகள் கதவின் வழியே கசிந்து பியானோவின் கால்களைத் தழுவி நிழல்களைப் பரிசளிக்கும் அந்தி மாலைப் பொழுதில் ,அவளுக்கான ராகத்தை வாசிக்க அமர்ந்த நாட்களில் தெரிந்தது அது அவ்வளவு சுலபமில்லை என்று... அன்று முதல் அவளுக்கான ராகத்தை இசைக்க அலைந்து திரிகிறேன் ஒரு தேசாந்திரியாய்.... அவளுடனான சந்திப்புகளில் நசுங்கி கிழிந்த நிமிடத் துளியின் அலறலில் தொடங்கி அவளில்லா நாட்களின் வெறுமையின் தகிப்பு வரை அவளுக்கான ராகதிற்க்காக சேமித்து வைத்துளேன்...உலகத்திற்கான தன் உறவை முடித்துக்கொண்டு உதிரும் இலையின் கடைசித் தருணங்களைப் பிழிந்து அவளுக்கான ராகத்தில் கலக்கும் எண்ணமிருக்கிறது எனக்கு...சிறு வயதில் அப்பாவின் கை பிடித்து நடை பழகிய நாட்களில், என்னை எதிர் கொண்ட அனைவருக்கும் அவளது முகச்சாயல் இருந்ததாக கண்ட கனவின் கடைசிச் சொட்டைக் கூட அவளுக்கான ராகத்தில் கலக்க எனது நியாபகச் செல்களில் பத்திரமாய் பதுக்கியிருக்கிறேன்....இருந்தும் இன்று வரை இசைக்கப் படாமலேயே இருக்கிறது அவளுக்கான ராகம்...