Tuesday, December 22, 2009

பைத்தியக்காரனின் ராகம்...


எனக்கும் அவளுக்குமான உறவு ஒரு பியானோ இசைக்கலைஞனின் விரல்களுக்கும், பியானோ கட்டைகளுக்குமான நெருக்கத்தை போன்றது...மாலை மஞ்சள் வெளிச்சத்தின் கீற்றுகள் கதவின் வழியே கசிந்து பியானோவின் கால்களைத் தழுவி நிழல்களைப் பரிசளிக்கும் அந்தி மாலைப் பொழுதில் ,அவளுக்கான ராகத்தை வாசிக்க அமர்ந்த நாட்களில் தெரிந்தது அது அவ்வளவு சுலபமில்லை என்று... அன்று முதல் அவளுக்கான ராகத்தை இசைக்க அலைந்து திரிகிறேன் ஒரு தேசாந்திரியாய்.... அவளுடனான சந்திப்புகளில் நசுங்கி கிழிந்த நிமிடத் துளியின் அலறலில் தொடங்கி அவளில்லா நாட்களின் வெறுமையின் தகிப்பு வரை அவளுக்கான ராகதிற்க்காக சேமித்து வைத்துளேன்...உலகத்திற்கான தன் உறவை முடித்துக்கொண்டு உதிரும் இலையின் கடைசித் தருணங்களைப் பிழிந்து அவளுக்கான ராகத்தில் கலக்கும் எண்ணமிருக்கிறது எனக்கு...சிறு வயதில் அப்பாவின் கை பிடித்து நடை பழகிய நாட்களில், என்னை எதிர் கொண்ட அனைவருக்கும் அவளது முகச்சாயல் இருந்ததாக கண்ட கனவின் கடைசிச் சொட்டைக் கூட அவளுக்கான ராகத்தில் கலக்க எனது நியாபகச் செல்களில் பத்திரமாய் பதுக்கியிருக்கிறேன்....இருந்தும் இன்று வரை இசைக்கப் படாமலேயே இருக்கிறது அவளுக்கான ராகம்...

Wednesday, September 24, 2008

மழை


மழையில் நனைவது
உனக்குப் பிடிக்கும்...
உன்னை நனைப்பது
மழைக்குப் பிடிக்கும்...
உனை
நனைக்காத மழைத்துளிகள்
மண்ணில்பட்டு மரிக்காமல்
மறுஜென்மம் எடுக்கிறன...
மீண்டும் மீண்டும்
மழையாய்....

Sunday, September 7, 2008

நீங்களும் நானும் ....



சப்தங்களில் தொலைகிறீர்கள்
நீங்கள் ....
மௌனத்தில் நிலைக்கிறேன்
நான் ...
சத்தத்தை விட
ஆழமானது மௌனம் ..!

வெளிச்சத்தை மட்டும்
விரும்புகிறீர்கள் நீங்கள் ...
அதனால்தான்
உங்கள் நிழல்கூட
கருப்பாய் இருக்க்கிறது ....

சாதாரணங்களையும்
சன்னதி என்கிறீர்கள் நீங்கள் ...
சன்னதியையும் சாதாரணம்
என்கிறேன் நான் ...!

வயிரைதாண்டி வாழ்வதில்லை
நீங்கள் ....
உயிரைத்தாண்டியும் வாழ்ந்துகொண்டுள்ளேன்
நான் ...!

வீடுகளுக்கு மட்டுமே
கதவுகள் வைக்றீர்கள்
நீங்கள் ...
எனது பயணத்தின்
கதவுகள் மூடுவதேயில்லை...!

இறுதியாக
வாழ்வதாக நடித்து கொண்டுளிர்கள்
நீங்கள்....
உண்மையாய்
வாழ்ந்து கொண்டுள்ளேன்
நான் ...!

நான்...?


எனக்கான தொடக்கத்தை
எங்கேயோ ஓர் விந்தணு
விரயம் செய்தது ..

எனக்கான தாலாட்டை
எங்கேயோ ஓர் குயில்
கூவிசெல்கிறது ...

எனக்கான சுவாசத்தை
எங்கேயோ ஓர் மரம்
சுத்திகரிக்கிறது ...

எனக்கான தாகத்தை
எங்கேயோ ஓர் மழைத்துளி
தத்தெடுக்கிறது...

எனக்கான பயணத்திற்காக
எங்கேயோ தைக்கப்படுகின்றன
அனுபவசெருப்புகள் ...

எனக்கான அறிவிற்காக
எங்கேயோ வளைக்கப்படுகிறது
ஓர் வினாக்குறியின் விளிம்பு...

எனக்கான காமத்திற்காக
எங்கேயோ உடைகிறது
ஓர் உதிரக்குடம் ...

எனக்கான முடிவிற்காக
எங்கேயோ ஈடு செய்கிறது
இன்னொரு தொடக்கம் ....

இதில்
எங்கே நான் .....?