Wednesday, June 30, 2010

பைத்தியக்காரனின் கனவு....




கனவுலகில் சஞ்சரித்தான் பைத்தியக்காரன்.... ஒத்தையடிப் பாதையொன்று அவன் முன் விரிகிறது... நடக்கத் துவங்குகிறான்.. பாதையின் முடிவில் அவனுக்காய் காத்திருக்கிறது கடல்... அதில் அலைகள் இல்லை... அது சப்தமிடுவதில்லை... சலனமற்ற சமுத்திரம் அவனை முழுவதுமாய் விழுங்கிவிடுகிறது.... அங்கு கையில் சிவப்பு நிறப் பழங்களுடன் பெண்கள் அவனை வரவேற்கிறார்கள்... ஆசையுடன் அவனுக்கு அந்தப் பழங்களை ஊட்டிவிட முயல்கிறார்கள்... அவன் அவைகளை தின்ன மறுத்து அவர்களை கடந்து செல்கிறான்.. எதிர்ப்பட்ட பாம்பை காரணமின்றி அடித்துக் கொல்கிறான்.. முன்னோர் ஜென்மத்துப் பகையை முடித்துவிட்ட பெருமிதத்தில் முன்னேறுகிறான்... தற்போது அவனை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு கருப்பு வெள்ளை என இரண்டு இதயங்கள் இருக்கின்றன...அவை துடிப்பதற்குப் பதிலாக பேசுகின்றன.. விசும்புகின்றன.. அழுகின்றன.. ஆசைப்படுகின்றன...காமத்தை தூண்டுகின்றன...ஏங்குகின்றன... பொறமைப்படுகின்றன...அதற்கு ஏற்ப பைத்தியகாரனை எதிர்கொண்ட இரண்டு இதய மனிதர்கள் உருமாறுகின்றனர்... நொடியில் ஏற்பட்ட மாற்றம் நாட்கணக்கில் தொடர்கிறது... உருமாறும் மனிதர்கள் அனைவரும் பைத்தியக்காரனைப் பார்த்து சிரிக்கின்றனர்.. கேலிசெய்கின்றனர்... அருகில் வர அஞ்சி தூரத்திலிருந்து ஓரக்கண்களால் அவனை வெறிக்கின்றனர்... அவர்களை விட்டு விலகி தனக்காய் காத்திருக்கும் காற்றுக்குமிழியில் ஏறிக்கொள்கிறான் அவன்...காற்றுக்குமிழி அவனை கிரகித்துக்கொள்கிறது...
அதன் வெற்றிடத்தில் தனக்குள் இருந்து தன்னை மீண்டும் பிரசவிக்கிறான் பைத்தியக்காரன்... புதிதாய் பிறந்த அவனின் இதயத்தை எதிரொலிக்கிறது காற்றுக்குமிழி... பைத்தியக்காரனின் இதயம் விசும்பவில்லை... அழுகவில்லை..ஆசைப்படுவதில்லை...காமம் தூண்டவில்லை... பொறாமைப்படுவதில்லை... ஏக்கத்தில் தவிப்பதில்லை... மாறாகத் துடிக்கிறது... லப் டப் ... லப் டப்..... லப் டப்.....

No comments: